×

ரூ.12 கோடி மதிப்பில் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் சென்றார்

திருவாரூர்: திருவாரூரில் நாளை நடைபெறும் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு திருவாரூர் சென்றார். திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பில் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில் கலைஞர் சிலையை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். பின்னர் கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும், முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்வும் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகின்றனர்.

இவ்விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்றிரவு விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து கார் மூலம் தஞ்சை வழியாக திருவாரூர் சென்று இரவு சன்னதி தெரு இல்லத்தில் ஓய்வெடுத்தார். இன்று (19ம் தேதி) விழா நடைபெறும் இடம் மற்றும் பொதுக்கூட்ட பந்தல் மேடை ஆகியவற்றை முதல்வர் நேரில் பார்வையிடுகிறார். பின்னர் மீண்டும் சன்னதி தெரு இல்லத்தில் தங்குகிறார். நாளை (20ம் தேதி) விழாவில் கலந்துகொள்ளும் முதல்வர் இரவு 11 மணியளவில் ரயில் மூலம் திருவாரூரில் இருந்து சென்னை புறப்பட்டு
செல்கிறார்.

* பீகார் முதல்வர், துணை முதல்வர் நாளை வருகை
கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் இருவரும் நாளை பீகாரிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகின்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூருக்கு மதியம் 3 மணியளவில் வருகின்றனர். கலைஞர் படித்த பள்ளியான வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஹெலிபேடில் வந்து இறங்கும் இருவரும் பின்னர் கார் மூலம் விழா நடைபெறும் காட்டூருக்கு செல்கின்றனர். விழாவில் கலந்து கொண்டு மாலை 5.30 மணியளவில் புறப்பட்டு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சென்று விமானம் மூலம் பீகார் செல்கின்றனர்.

The post ரூ.12 கோடி மதிப்பில் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் சென்றார் appeared first on Dinakaran.

Tags : Artisan Gotam ,Chief Minister ,B.C. G.K. Stalin ,Thiruvarur ,Tiruvarur ,Chief Minister of India ,Artist Gotam ,G.K. Stalin ,CM G.K. Stalin ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...